வரலாறு

கடற்புலிகள்  துணைத்தளபதி  கேணல் விநாயகம் அவர்கள்

மூன்று பக்கங்களும் கடலால் சூழப்பட்ட யாழ்.குடாநாட்டின் வெள்ளலைகள் கரைதழுவுகின்ற வடமராட்சிக் கிழக்குப்பிரதேசத்தில் மருதங்கேணி எனும் நெய்தல் நிலமண்ணில் 1973-ம் ஆணடு பெப்ரவரி மாதத்தில் தங்கவேலு காந்திமலர் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தான் சுதரதன். அம்மா அப்பா மற்றும் இரண்டு சகோதரர்களையும் ஒரு சகோதரியையும் கொண்ட அளவான குடும்பம். சுதரதனை எல்லோரும் செல்லமாக சுதன் என்றே அழைத்தனர். சுதன் தனது மழலைப் பருவத்தைக் கடந்து தனது பள்ளிப் படிப்பில் ஆரம்பக் கல்வியை மருதங்கேணி இந்துவித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை உடுத்துறை மகா வித்தியாலயத்திலுமாகத் தொடர்ந்தான்.

இளமையிலேயே சுறுசுறுப்பும் துடிப்பும் குறும்புத்தனமும் இவனுடன் கூடிப்பிறந்த குணவியல்புகளாக இருந்தன. கல்வியிலும் விளையாட்டிலும் தனது திறமைகளை வெளிக்காட்டிய சுதனிடம் கலைத்திறனும் மிதமாகவே காணப்பட்டது. அன்றய நாட்களில் மருதங்கேணியில் அரங்கேற்றப்பட்ட காத்;தவராயன் சிந்துநடை மரபுவழிக்கூத்தில் பிரதான பாத்திரங்களையேற்று நடித்த சுதன் பலரது அபிமானத்தையும் பாராட்டுக்களையும் பெற்றிருந்தான்.

1989-ம் ஆண்டுகாலப்பகுதி. இந்தியப்படையினர் தாயகத்தில் நிலைகொண்டிருந்த காலப்பகுதி. அமைதிப்படை என்ற பெயரில் தாயகத்தில் கால்பதித்த இந்தியப்படையினர் அதற்கு மாறாக ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இவனது வீட்டிலிருந்து சுமார் ஒரு மைல் துரத்தில் தாளையடியில் இந்தியப்படையினரின் முகாம் அமைந்திருந்தது.

தாளையடி முகாமிலிருந்து அடிக்கடி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இந்தியப்படையினர் மக்கள் குடியிருப்புக்கள் மீது மேற்கொள்ளும் சுற்றிவளைப்புக்கள் மற்றும் கைதுகள் சித்திரவதைகள் என்பனவும் க.பொ.த.சாதாரணதரத்தில் கல்விகற்றுக்கொண்டிருந்த சுதனின் மனதில் ஆறாத வடுக்களை அன்றய நாட்களில் ஏற்படுத்தியிருந்தது.

அந்த நாட்களில் விடுதலைப்புலிகள மணலாற்றுக் காடுகளிலும் ஏனைய இடங்களிலும் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டிருந்தனர். இநதச்சூழ்நிலையில்த்தான் சுதனும் வடமராட்சிக்கிழக்கைச்சேர்ந்த இன்னும் சில இளைஞர்களும் அன்னை மண்ணை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்து சுதந்திர தமிழீழம் அமைப்பதை இலட்சியமாக வரித்துக்கொண்டு விடுதலைப்போராட்டத்தில் இணைந்துகொள்வதற்கு முடிவெடுத்தனர்.

அந்த நாட்களில் வடமராட்சிக்கிழக்கு சுண்டிக்குளம் காட்டுப்பகுதியிலும் விடுதலைப்புலிகளின் ஒரு அணியினர் தலைமறைவாகியிருந்து போராட்டப்பணிகளை முன்னெடுத்தனர். இந்த அணியில் லெப் கேணல் மறவன் மாஸ்ரரும் ஒருவராகவிருந்தார். மறவன் மாஸ்ரர் வடமராட்சிக்கிழக்கு தளையடியைச் சேர்ந்தவரும் முன்னாள் உடுத்துறை மகா வித்தியாலயத்தின் ஆசிரியருமென்பதால் பாடசாலை மாணவர்களிடத்திலும் மக்களிடத்திலும் நெருக்கமானதொரு உறவுநிலையிருந்தது. போராட்டத்திற்கான ஆட்கள்; இணைப்புப்பணியை மறைமுகமான முறையில் மேற்கொள்வது மற்றும் போராளிகளுக்கான சாப்பாட்டுப் பார்சல்கள் உட்பட போராட்டத்திற்கான முக்கியமான தேவைகள் சிலவற்றயும் மக்களிடத்திலிருந்து இரகசியமான முறையில் பெற்றுக்கொள்வது போன்ற வேலைத்திட்டங்களை மறவன் மாஸ்ரர்தான் மேற்கொண்டிருந்தார்.

இந்த நிலையில்த்தான் விடுதலைப்போராட்டத்தில் இணைந்துகொள்ள முடிவெடுத்த பதினாறு வயதேயான சுதன் மறவன் மாஸ்ரருடன் மறைமுகமான முறையில் தொடர்பினை ஏற்படுத்தியிருந்தான். அதற்கமைவாக மறவன் மாஸ்ரரின் ஏற்பாட்டில் 1989-ம் ஆண்டின் முற்பகுதியில் சுதனும் இன்னும் சில இளைஞர்களும் சுண்டிக்குளம் காட்டுப்பகுதிக்குச் சென்று புதிய போராளிகளாக இணைந்து கொண்டனர். இதன் பின்னர் இந்த புதிய போராளிகள் அணியினர் மணலாற்றுக் காட்டுப்பகுதிக்குச் சென்று பின்னர் அங்கிருந்து வவுனியா காட்டுப்பகுதியில் அமைந்திருந்த வியட்னாம் பயிற்சிப்பாசறைக்குச் சென்றனர்.

வியட்னாம் பயிற்சிப்பாசறையின் இரண்டாவது அணியினருக்கான அடிப்படைப் பயிற்சிகள் தொடங்கியபோது வடமராட்சிக்கிழக்கிலிருந்து சென்ற இந்தப்புதிய போராளிகள் அணியினரும் அடிப்படைப்பயிற்சியில் இணைத்துக்கொள்ளப்பட்டார்கள். அங்குதான் சுதனுக்கு இயக்கப் பெயராக விநாயகம் என்ற பெயர் சூட்டப்படுகிறது. உடற்பயிற்சி கொமாண்டஸ் பயிற்சி, ஆயுதங்களின் சூட்டுப்பயிற்சி போன்ற அனைளத்துப் பயிற்சிகளிலும் மிகத்திறமையாகத் தேர்ச்சி பெற்ற விநாயகம் சிறந்த போர்வீரனாக பயிற்சிப்பாசறையிலிருந்து வெளிவருகின்றான்.

அன்றைய நாட்களில் தாக்குதல்கள் பெரும்பாலும் மணலாற்றுக் காட்டுப்பகுதிகளிலேயே விரிந்திருந்தது. மணலாற்றுக்காட்டுப்பகுதியில் இந்திய இராணுவத்தினருக்கெதிரான தாக்குதல் ஒன்றுதான் விநாயகத்தின் கன்னித்தாக்குதலாக அமைந்திருந்தது. அதைத் தொடர்ந்து தேசவிரோதக் குழுக்கள் மீதான தாக்குதல் என விநாயகத்தின் களமுனைகள் விரிந்தன.

1990-ம் ஆண்டின் முற்பகுதியில் இந்தியப்படையினர் தாயகத்திலிருந்து முற்றாக வெளியேறியிருந்தனர். அதைத்தொடர்ந்து 1990-ம் ஆண்டின் நடுப்பகுதியில் இலங்கை இராணுவத்தினருடனான இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியிருந்தது. யாழ்-கோட்டையில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினரை விடுதலைப்புலிகள் முற்றுகையிட்டிருந்த போது விநாயகமும் அந்த அணியோடு நின்றிருந்தார். அத்தோடு கோட்டை இராணுவத்தளத்தை கைப்பற்றுவதற்கு விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தாக்குதல்களிலும் விநாயகம் நேரடியாகப் பங்கெடுத்திருந்தார்.

கோட்டை இராணுவ முகாம் விடுதலைப்புலிகளின் வசம் வீழ்ந்ததைத்தொடர்ந்து பலாலி கட்டுவன் பகுதிகளிலும் களப்பணிகளிலும் சில தாக்குதல்களிலும் பங்குகொண்ட விநாயகம் அவர்கள் பின்னர் அப்போதய விடுதலைப்புலிகளின் பிரதித்தலைவரும் மக்கள் முன்னணித்தலைவருமாகிய மாத்தையா அவர்களின் மெய்ப்பாதுகாவலர் அணியில் இணைத்துக்கொள்ளப்படுகின்றார். மெய்ப்பாதுகாவலர் அணிக்கான பயிற்சியிலும் மிகத்திறமையான முறையில் தேர்ச்சி பெற்று மாத்தையா அவர்களின் பிரதான மெயப்பாதுகாப்பாளர்களில் ஒருவராகச்செயற்பட்டுக்கொண்டிருந்தார்.

இந்தக்காலப்பகுதியில் அதாவது 1991-ம் ஆண்டு காலப்பகுதியில் நடைபெற்ற ஆகாயக்கடல்வெளிச்சமர் உட்பட இன்னும் பல தாக்குதல்களிலும் பங்கெடுத்திருந்தார்.

தொடர்ந்துவந்த நாட்களில் 1993-ம் ஆண்டின் நடுப்பகுதியில் விநாயகம் அவர்கள் கடற்புலிகள் அணிக்குள் உள்வாங்கப்பட்டார். கடற்புலிகள் அணிக்குள் உள்வாங்கப்பட்டிருந்த விநாயகத்திடம் அரசியல் ஆளுமையும் நிர்வாகத்திறனும் இருப்பதைக்கண்டுகொண்ட கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசை அவர்கள் விநாயகம் அவர்களை கடற்புலிகளின் மன்னார் மாவட்டத்தின் அரசியல்த்துறைப்பொறுபாளராக நியமித்திருந்தார்.

மன்னார் மாவட்டத்தின் அரசியல் நிர்வாகத்தை பொறுப்பேற்றுக்கொண்ட விநாயகம் அவர்கள் தனது அரசியல் ஆளுமையினாலும் உறுதியானதும் தெளிவானதுமான பேச்சுக்களினாலும் மக்கள் மனங்களில் இடம்பிடித்திருந்தார். இந்தகாலப்பகுதியில் நடைபெற்ற பூநகரி-நாகதேவன்துறை கூட்டுப்படைத்தளம் மீதான சமரின்போது அதில் விநாயகமும் பங்குகொண்டிருந்தார். அந்தச்சமரில் காயமடைந்த விநாயகம் அவர்கள் தனது ஒரு கண்பார்வையையும் இழந்தார்.

அதனைத்தொடர்ந்து குறிப்பிட்ட நாட்கள் மருத்துவ ஓய்விலிருந்த விநாயகம் அவர்கள் மீண்டும் தனது அரசியல் பணிகளை முன்னெடுத்தார். அதனைத்தொடர்ந்து விநாயகம் அவர்கள் சிறப்புத்தளபதி சூசை அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக குறிப்பிட்ட காலப்பகுதிக்கு புலனாய்வுக்கல்வியை சிறப்பான முறையில் கற்று நிறைவு செய்திருந்தார்.

1996-ம் ஆண்டு ஏப்ரல் மாததில் விடுதலைப்புலிகள் யாழ்.குடாநாட்டிலிருந்து வெளியேறி வன்னிப்பெருநிலப்பரப்பை தளமாகக்கொணடு செயற்பட்டவேளையில்தான் முல்லைத்தீவு இராணுவத்தளம்மீதான ஓயாதஅலைகள்-01 நடவடிக்கையினை விடுதலைப்புலிகள் மேற்கொண்டு அந்த இராணுவத்தளத்தை விடுதலைப்புலிகள் கைப்பற்றியிருந்தனர்.

இந்த தாக்குதலிலும் பங்குகொண்ட விநாயகம் இந்தச்சம்பவத்தில் தனது தலையில் காயமடைந்திருந்தார். அதனைத்தொடர்ந்து மருத்துவ சகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டு உடல்நிலை தேறியிருந்தார்.

தொடர்ந்துவந்த நாட்களில் சிறப்புத்தளபதி சூசை அவர்கள் தனக்கான பிரதான மெயப்பாதுகாப்பு அணிப்பொறுப்பாளராக விநாயகம் அவர்களை நியமித்திருந்தார். சிறப்புத்தளபதி சூசை அவர்களுக்கான பாதுகாப்புக்கடமையை விசுவாசமாகவும் அர்ப்பணிப்புடனும் செய்துவந்தார்.

அத்தோடு பாதுகாப்பு அணிக்கென தேர்வுசெய்யப்படுகின்ற போராளிகளுக்கும் பாதுகாப்புப்பயிற்சியை வழங்குகின்ற பயிற்சி ஆசிரியராகவும் விநாயகம் விளங்கினார். குறிப்பிட்ட காலப்பகுதியில் பாதுகாப்புப்பணிகளை சிறப்பாகச்செய்து சூசை அவர்களின் நம்பிக்கைக்குப்பாத்திரமான விநாயகம் அவர்கள் பின்னரான நாட்களில் முல்லைத்தீவு-செம்மலைப்பகுதியில் தளமிட்டிருந்த வசந்தன் கடற்சண்டை அணிக்குள் உள்வாங்கப்பட்டிருந்தார்.

அந்த கடற்சண்டை அணியில் சண்டைப்படகு ஒன்றின் இரண்டாம் நிலையிலான கட்டளை அதிகாரியாகச் செயற்பட்டு குறிப்பிட்ட சில கடற்சண்டைகளிலும் கிழக்கு மாகாணத்திற்கான விநியோக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்ததுடன் அந்த கடற்சண்டை அணியினரின் முகாமின் நிர்வாகப்பொறுப்பாளராகவும் செயற்பட்டு போராளிகளின் நன்மதிப்பையும் பெற்றிருந்தார்.

இதன் பின்னரான நாட்களில் அதாவது 1999-ம் ஆண்டுகாலப்பகுதியில் சிறப்புத்தளபதி சூசை அவர்களால் விநாயகம் அவர்கள் கடற்புலிகளின் அரசியல்த்துறைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இவர் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து கடற்புலிகள் அரசியல் துறையின் செயற்பாடுகள் முழுவீச்சுப்பெற்றன.

தனது நேர்த்தியான செயற்பாடுகளாலும் பேச்சுத்திறனாலும் மக்களுக்கும் கடற்புலிகளுக்குமிடையிலான நெருக்கமான உறவுப்பாலத்தை ஏற்படுத்தியிருந்தார். அத்துடன் தனது ஆளுகையின் கீழ் கடமையாற்றுகின்ற அரசியல் போராளிகளையும் பூரண அரசியல்தெளிவும் ஆளுமைமிக்க போராளிகளாகவும் வளர்த்தெடுத்தார். 1999-ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட ஓயாத அலைகள்-03 நடவடிக்கை மூலமாக வெற்றிலைக்கேணி-கட்டைக்காடு இராணுவத்தளங்கள் உட்பட வடமராட்சிக்கிழக்கின் பல பகுதிகளும் மீட்கப்பட்டபோது ஏற்கனவே வடமராட்சிக்கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்து மாத்தளன் பொக்கணை பகுதிகளில் வசித்துவந்த மக்களை எல்லைக்காப்புப்படையணியாகவும் கிராமியப்படையாகவும் அணிதிரட்டி அதற்கு தானே தலைமையேற்றுச்சென்று வடமராட்சிக்கிழக்குப்பிரதேசத்தில் விரிந்த களமுனைகளில் பங்கெடுத்திருந்தார்.

இதன் பின்னரான நாட்களில் எல்லைக்காப்புப்படையணிகளை வீதிப்பாதுகாப்பு மற்றும் கடற்கரையோரப்பாதுகாப்பு போன்ற பாதுகாப்புக் கடமைகளையும் சிறந்த முறையில் நெறிப்படுத்தினார். இவ்வாறாக சுமார் நான்கு ஆண்டுகள் தனது அரசியல்த்துறைப்பொறுப்பு நிலையை மிகவும் சிறப்பான முறையில் மேற்கொண்டார்.

நோர்வே அரசின் அனுசரணையுடன் போர்நிறுத்தம் அமுல் படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் அதாவது 2003-ம் ஆண்டின் முற்பகுதியில் விநாயகம் அவர்கள் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் கடற்புலிகள் பிரதேசங்களுக்கான இணைப்பாளராகவும் கடற்கண்காணிப்பு நிலையங்களுக்கான பொறுப்பாளராகவும் சிறப்புத்தளபதி சூசை அவர்களால் நியமிக்கப்பட்டார். சமநேரத்தில் இரண்டு பொறுப்பு நிலைகளையும் வகித்த விநாயகம் அவற்றை மிகவும் அர்ப்பணிப்புத்தன்மையுடன் செய்திருந்தார்.

இவர் பொறுப்பேற்றதைத்தொடர்ந்து தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் அபிவிருத்தித்திட்டங்கள் கடற்புலிகளின் பிரதேசங்களில் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டன. இவரது பேச்சுத்திறன்கள் அதிகரிக்கவே 2004-ம் ஆண்டு நவம்பர்மாதம் சிறப்புத்தளபதி சூசை அவர்களால் விநாயகம் அவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு பரப்புரைப்பணிகளுக்காக அனுப்பப்பட்டிருந்தார். நோர்வே சுவிஸ் உட்பட இன்னும் பல நாடுகளுக்குச்சென்று தனது பேச்சாற்றலினால் விடுதலைப்போராட்டத்தின் நியாயப்பாடுகளை புலம்பெயர் மக்களுக்கு தெளிவுபடுத்தினார்.

சுமார் இரண்டு மாதகாலமாக புலம்பெயர்நாடுகள் பலவற்றிலும் தனது பரப்புரைப்பணிகளை மேற்கொண்டு அதற்கூடாக விடுதலைப்போராட்டம் வீச்சுப்பெறுவதற்காக பெரும்தொகையான நிதி கிடைப்பதற்கு உறுதுணையாக உழைத்திருந்தார். ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு அந்த பேரலையின் ஊழித்தாண்டவத்தில் தனது உறவினர்களும் தான் நேசித்த மக்களுமாக ஆயிரக்கணக்கில் பலிகொள்ளப்பட்டபோதிலும்கூட அந்த துயரங்களையெல்லாம் தாங்கிக்கொண்டு தனது கொள்கையில் குறிதவறாமல் புலம்பெயர் நாடுகளில் தனது கடமையை நிறைவாகச்செய்திருந்தவர்.

இதன்பின்னரான நாட்களில் 2005-ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் தாயகத்திற்கு வந்து கரையோரப்பாதுகாப்புப் பொறுப்பாளராக செயற்பட்டதோடு மக்கள் படைக்கட்டுமானப்பயிற்சித்திட்டங்களை நெறிப்படுத்துபவராகவும் செயற்பட்டார். அத்தோடு சிறப்புத்தளபதி சூசை அவர்களின் பிரத்தியேகமான இராணுவ மற்றும் நிர்வாக வேலைத்திட்டங்களையும் நெறிப்படுத்தினார். இந்தக்காலப்பகுதியில்தான் இவரது சேவைகளை கோரவிருக்கும் முகமாக தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் விநாயகம் அவர்களுக்கு கைத்துப்பாக்கியும் (பிஸ்ரல்) டாட்டாப்பிக்கப் வாகனமும் வழங்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து வந்த நாட்களில் கடற்புலிகளின் இராணுவ அரசியல்ப்பொறுப்பாளராக குறிப்பிட்ட காலப்பகுதியில் செயற்பட்டிருந்தார். 2007-ம் ஆண்டின் நடுப்பகுதியில் சிறப்புத்தளபதி சூசை அவர்கள் படகு விபத்திற்கு உள்ளாகி முழுமையான மருத்துவக்கண்காணிப்பில் இருந்தபோது அவருக்கான பாதுகாப்புப்பொறுப்பாளராக விநாயகம் அவர்கள் செயற்பட்டார்.

இதைத்தொடர்ந்து 2007-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தின் இறுதிப்பகுதியில் தேசியத்தலைவர் அவர்களால் விநாயகம் அவர்கள் கடற்புலிகளின் துணைத்தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். துணைத்தளபதியாக பொறுப்பேற்றதைத்தொடர்ந்து சிறப்புத்தளபதி சூசை அவர்களின் வேலைச்சுமைகளில் ஒரு பகுதியை தானே பொறுப்பேற்று அவற்றை சிறப்பான முறையில் முன்னெடுத்திருந்தார்.

நான்காம் கட்ட ஈழப்போர் வீச்சுப்பெற்ற வேளையில் போராளிகளுக்கான புத்தூக்கப்பயிற்சி மற்றும் மக்கள் படைக்கட்டுமானப்பயிற்சி என்பவற்றையும் அவரே நேரடியாக நின்று நெறிப்படுத்தியிருந்தார். என்னதான் வேலைப்பழுக்கள் இருந்தாலும் மக்கள் சந்திப்புக்களை நடத்தி மக்களின் தேவைகளைக்கேட்டறிந்து அவற்றுக்கான தீர்வுகளையும் உடனுக்குடன் பெற்றுக்கொடுத்தார்.

வன்னியில அரசபடைகளின் ஆக்கிரமிப்புப்போர் உச்சம் பெற்றிருந்தவேளையில் யாழ.;மாவட்டத்தையும் முல்லைத்தீவுமாவட்டத்தையும் பிரிக்கும் சுண்டிக்குளம்-நல்லதண்ணீர்த்தொடுவாய் வரையிலும் படையினர் முன்னேறியிருந்தனர். இந்தச்சூழ்நிலையில் நல்லதண்ணீர்த்தொடுவாயை அடுத்துள்ள பேப்பாரைப்பிட்டிப்பகுதியில் பலமான காவல்நிலையொன்றை அமைக்கவேண்டிய நிர்ப்பந்தம் விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்டது.

ஏனெனில் பேப்பாரைப்பிட்டி சாலைப்பகுதிகளை இராணுவம் கைப்பற்றும் படசத்தில் மாத்தளன் பொக்கணை கிராமங்களின் இருப்பு கேள்விக்குறியாகவிருந்தது. ஆகவேதான் பேப்பாரைப்பிட்டிப்பகுதியில் பலமான காவல்நிலை விடுதலைப்புலிகளால் அமைக்கப்பட்டது. பே;பாரைப்பிட்டியின் களமுனைகளின் கட்டளைத்தளபதிகளாக துணைத்தளபதி விநாயகம் மற்றும் செழியன் காதர் பகலவன் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

2009-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04-ம் திகதி நல்லதண்ண்ணீர்த்தொடுவாய்ப்பகுதியில் நிலைகொண்டிருந்த படையினர் யுத்த டாங்கிகள் ஆட்லறிகள் மற்றும் கனரக ஆயுதங்களின் சூட்டாதரவுடன் பேப்பாரைப்பிட்டியை நோக்கியதான முன்னேற்றத்தை மேற்கொண்டிருந்தனர். இதைத்தொடர்ந்து பேப்பாரைப்பிட்டிப்பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும் அரசபடையினருக்கும் கடும் சமர் மூண்டது. பேப்பாரைப்பிட்டி பெரும் சமர்க்களமாக மாறியது. இறுதிவரையிலும் தான் வரித்துக்கொண்ட இலட்சியத்தில் உறுதியுடனும் துணிச்சலுடனும் சமரிட்டு பேப்பாரைப்பிட்டி மண்ண்ல் தனது உயிரை தமிழ்த்தாயின் விடுதலைக்காக அர்ப்பணித்திருந்தார். இந்த சமரில் துணைத்தளபதி லெப் கேணல் விநாயகம் உடபட கேணல் காதர் லெப் கேணல் பகலகன் உட்பட இன்னும் பல போராளிகள் வீரச்சாவினைத்தழுவிக்கொண்டனர். மாவீரர்களின் வரலாற்றில் துணைத்தளபதி லெப் கேணல் விநாயகம் அவர்களின் வரலாறும் தனித்துவமான அத்தியாயத்தை வகிக்கின்றது.

Read 24 times Last modified on Tuesday, 20 February 2018 15:17
Share this article

About author

Thiru

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…