தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரை 1991

அன்புக்கும், மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே !

“இன்றைய தினத்தை மாவீரர் நாளாக, தியாகிகளின் திருநாளாக எமது தேசத்தின் – பெருநாளாக நாம் கொண்டாடுகின்றோம்.

எமது மண்ணுக்காக, எமது மக்களுக்காக, தமது இன்னுயிரை அர்ப்பணித்த தியாகிகளை, இன்று நாம் எமது இதயத்து ஆலயங்களில் நினைவு கூர்ந்து கௌரவிக்கின்றோம்.

ஒரு புனித இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்திற்காக போராடி, அந்த இலட்சியத்தை அடைவதற்காக தமது வாழ்வைத் தியாகம் செய்த இந்த மாவீரர்கள் மகத்துவமானவர்கள்.

இந்த மாவீரர்களது அற்புதமான இலட்சிய வாழ்க்கை, அவர்களது தியாகங்கள், அவர்கள் அனுபவித்த துன்ப துயரங்கள், ஏக்கங்கள், அவர்கள் கண்ட கனவுகள் இவை எல்லாவற்றினதும் ஒட்டுமொத்த வெளிப்பாடாகவே எமது போராட்ட வரலாறு முன்னேறிச் செல்கின்றது. எமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால், வியர்வையால் – கண்ணீரால் எழுதப்பட்டது.

எமது விடுதலை இயக்கம் மிகவும் நீண்ட, கடினமான, நெருக்கடிகள் நிறைந்த ஒரு வரலாற்றுப் பயணத்தை தொடர்ந்து வருகின்றது. உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத சவால்களை, சோதனைகளை, எதிர்பாராத திருப்பங்களை இந்த வரலாற்று ஓட்டத்தில் நாம் எதிர் கொண்டோம்.

எமது போராட்டத்திற்கு எதிராக பல்வேறு விரோத சக்திகளும், துரோக சக்திகளும் இணைந்து செயற்பட்டன. எமது வரலாற்று எதிரியுடன் வலிமை மிகுந்த வல்லரசுகளும் எமக்கு எதிராக அணி சேர்ந்து கொண்டன. சதிகளாக, நாசச் செயல்களாக, நம்பிக்கைத் துரோகங்களாக, ஏமாற்றும் படலங்களாக எமதியக்கம் பல நெருக்கடிகளை எதிர்கொண்டது. அலைஅலையாக எழுந்த எதிரியின் படையெடுப்புகளை ஒரு புறமும், அன்னிய இராணுவ ஆக்கிரமிப்பை மறுபுறமாகவும் நாம் தனித்து நின்று எதிர்கொண்டோம். பல கட்டங்களில் எமது இயக்கம் அழிவின் விழிம்புக்குத் தள்ளப்பட்டது.

புயலாக எழுந்த இந்தப் பேராபத்துகளை எல்லாம் மலையாக நின்று எதிர் கொள்ள இரும்பை ஒத்த மன உறுதி தேவைப்பட்டது. இந்தச் சோதனைமிகுந்த நெருக்கடியான – வரலாற்றுக் கட்டங்களில் எனக்குப் பக்கபலமாக, மனித மலைகளாக உறுதியோடு நின்ற மாவீரர்களை நான் என்றும் மறக்க முடியாது. இந்த இலட்சிய வேங்கைகளின் தளராத உறுதிதான் எமது – சுதந்திர இயக்கத்தின் தூண்களாக நிற்கின்றன.

எமது போராட்டம் எத்தனையோ சவால்களுக்கு ஈடு கொடுத்து தனது விடுதலைப் பயணத்தில் வெற்றி நடை போட முடிந்தது என்றால், அதற்கான அடிப்படைக் காரணம் எமது இலட்சிய உறுதி தான், என்பதை நான் திட்டவட்டமாக கூறுவேன். நீண்ட வரலாற்று அனுபவத்தில் – நான் கண்டு உணர்ந்த உண்மை இது.

ஒரு விடுதலைப் போராட்டம் பல சூறாவழிகளைச் சந்திக்கின்றது, பல நெருக்கடிகளை எதிர் கொள்கின்றது. கொந்தளிப்பான பல சூழ்நிலைகளுக்கு முகங்கொடுக்கின்றது. விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் ஒரு ரணகளம். சாவையும், அழிவையும், துன்பத்தையும் பரிசாகக் கொடுத்துதான் நாம் சுதந்திரம் எனும் சுவர்க்கத்தை காண முடியும். கரடு முரடான பாதைகள் நிறைந்த இந்த இலட்சியப்பயணத்தில் எமக்கு ஒரேயொரு ஊன்று கோலாக இருப்பது, எமது உறுதி தான்.

இன்று ஒரு புதிய நெருக்கடியான வரலாற்றுத் திருப்பத்தை நாம் சந்தித்து நிற்கின்றோம்.

எதிரிப்படைகள் யாழ்ப்பாணக் குடா நாட்டை முற்றுகையிட்டு நிற்கின்றன. பொருளாதார்த் தடைகளை இறுக்கி உணவுப் பஞ்சத்தை உண்டு பண்ண எதிரி முனைகின்றான். இராணுவ அழுத்தம் பொருளாதார நெருக்குதல் என்ற ரீதியில் இரு முனைகளில் எமது மக்கள் மீது யுத்தம் ஒன்று ஏவப்பட்டிருக்கின்றது. எமது போராட்டத்தின் அசைக்க முடியாத அரணாக நிற்கும் எமது மக்களின் மனோபலத்தை உடைத்துவிட எதிரியானவன் எல்லாவித தந்திரோபாயங்களையும் கடைப்பிடிக்கலாம் – என்பது எமக்குத் தெரியாதது அல்ல.

எமது மக்கள் சிங்கள இனவாத அடக்குமுறையின் அக்கினிப் பட்டறையில் புடம் போடப்பட்டவர்கள். அரச பயங்கரவாதத்தின் அகோரங்களை சந்தித்தவர்கள். துன்பச் சிலுவையை சதா சுமந்து பழகியவர்கள், மரணத்தின் நிழலில் படுத்துறங்கி வாழ்பவர்கள்.

களைத்துப் போனவனின் இறுதி ஆயுதமாக உணவுப்போர் எமது மக்களின் மீது தொடுக்கப்படலாம், பட்டினித் தீயால் மக்களின் மன உறுதியைச் சுட்டெரிக்க எதிரி முயற்சிக்கலாம். ஆனால் சுதந்திரப் பசியில் உறுதி பூண்ட மக்களை சோற்றுப் பசி தீண்டிவிடப்போவதில்லை.

எனது அன்பார்ந்த மக்களே !

இன்று நாம் எதிர்கொள்ளும் இந்த நெருக்கடியான சூழ்நிலையில் எதிரியின் எந்த சவாலுக்கும் நாம் முகம் கொடுக்க தயாராக இருக்க வேண்டும்.

எமது மன உறுதிக்கு எதிரி சவால் விடுக்கின்றான். இந்தச் சவாலை ஏற்பதற்கு எமக்கு ஆன்ம உறுதியைத் தவிர வேறு ஆயுதங்கள் தேவையில்லை.

சிங்கள அரசானது ஒரு புறம் போர்க்கொடியை உயர்த்திக் கொண்டு, மறுபுறம் சமாதானச் சமிக்கைகளைக் காட்டுகின்றது.

நாம் சமாதானத்திற்கும் தயார், போருக்கும் தயார், நாம் சமாதானத்தின் வழியைத் திறப்பதா அல்லது யுத்தத்தின் பாதையில் செல்வதா என்பதனை எதிரிதான் தீர்மானிக்க வேண்டும்.

நாம் சமாதானத்தின் கதவுகளைத் திறந்து விட்டிருக்கின்றோம். சமாதான வழிமுறையின் சமரசப் பேச்சுகளை நடத்த நாம் தயார்.

எந்தவித அழுத்தங்களுமின்றி, எந்தவித ஆதிக்கமுமின்றி சமத்துவத்தின் அடிப்படையில், நீதியின் அடிப்படையில், நிபந்தனையின்றிப் பேச்சுகளில் பங்குகொள்ள நாம் என்றும் தயார்.

எமது கொள்கையை, எமது நிலைப்பாட்டை, எமது தேசிய போராட்டத்திற்கு ஆதாரமான அடிப்படைகளை, சிங்கள அரசிற்கும் உலகிற்கும் எடுத்து விளக்க பேச்சு வார்த்தைகள் வாய்ப்பளிக்கும்.

நாம் இனத்துவேசிகள் அல்லர், போர் வெறி கொண்ட வன்முறையாளர்களும் அல்லர். நாம் சிங்கள மக்களை எதிரிகளாகவோ விரோதிகளாகவோ கருதவில்லை. நாம் சிங்கள தேசத்தை அங்கீகரிக்கின்றோம். சிங்களப் பண்பாட்டை கௌரவிக்கின்றோம், சிங்களமக்களின் தேசிய வாழ்வில் அவர்களது சுதந்திரத்தில் நாம் எவ்விதமும் தலையிட விரும்பவில்லை.

நாம் எமது வரலாற்று தாயகத்தில் ஒரு “தேசியமக்களினம்” என்ற அந்தஸ்துடன் நிம்மதியாக, சுதந்திரமாக, கௌரவத்துடன் வாழ விரும்புகின்றோம், எம்மை நிம்மதியாக வாழ விடுங்கள் என்பதுதான் எமது மக்களின் எளிமையான அரசியல் அபிலாசை. இந்த நியாயமான, நீதியான, நாகரீகமான எமது மக்களின் வேண்டுகோளை சிங்கள அரசு எப்பொழுது அங்கீகரிக்கின்றதோ அப்பொழுதுதான் ஒரு நிரந்தர சமாதானமும், தீர்வும் ஏற்பட வாய்ப்பு உண்டு.

இராணுவ அடக்குமுறை என்ற அணுகுமுறை மூலம் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்பதை சிங்கள அரசு இன்னும் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை.இராணுவ மேலாதிக்கத்தை எட்டிப் பிடிக்க வேண்டும், தமிழர் தாயகத்தை ஆக்கிரமிக்க வேண்டும் என்ற ஆதிக்க வெறி இன்னும் சிங்கள ஆளும் வர்க்கத்திடமிருந்து அகன்று போனதாகத் தெரியவில்லை.

இராணுவ ஆதிக்கத்திற்கும் அழுத்தத்திற்கும் புலிகள் இயக்கம் என்றுமே விட்டுக்கொடுத்ததேயில்லை. கொண்ட கொள்கையில் நாம் என்றுமே வளைந்து கொடுத்தது இல்லை. எமது இயக்கத்தின் இந்த உறுதிப்பாட்டை உலகத்தின் மிகப் பெரிய இராணுவமே பரீட்சித்துப் பார்த்து தோல்வி கண்டது. சிங்கள இராணுவமும் இந்த வரலாற்றுத் தவறை சந்திக்கத்தான் நேரிடும்.

எமது அன்பார்ந்த மக்களே,

நீண்ட விடுதலைப் பயணத்தில் சோர்வுகள் எம்மை ஆட் கொள்ளலாம், போராட்ட வாழ்வின் பெரும் சுமைகள் எம்மை அழுத்திப் பிடிக்கலாம், மேலும் பழுக்கள் எம்மீது சுமத்தப்படலாம்.

ஆனால் நாம் ஒரு சத்திய இலட்சியத்தில் பற்றுக்கொண்டு. உறுதிகொண்ட மக்களாக ஒன்று திரண்டு நின்றால் – எந்தவொரு சக்தியாலும் எம்மை அசைக்கவோ அழிக்கவோ முடியாது.

வீர சுதந்திரம் வேண்டி நிற்கும் மக்களுக்கு உறுதிதான் வலுமிக்க ஆயுதம்.

இன்று எமது மாவீரர்களின் கல்லறைகளிலிருந்து ஒலிக்கும் சுதந்திர கீதமும் உறுதியின் உன்னதத்தைத்தான் பாடுகின்றது.

வணக்கம்,

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.”

152 Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *