தமிழினத்தின் வரலாற்று உரிமை! கனடா நாட்டில் இருந்து தமிழக முதலமைச்சருக்கு கடிதம்!

(ரொரன்ரோ, கனடா)

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்படவேண்டும். அது தமிழினத்தின் வரலாற்று உரிமை அதற்கு ஆவன செய்யக் கோரி புலம்பெயர் தமிழர் சார்பில், தமிழ்த்தாய் மன்றம் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை கோரியுள்ளது. இது குறித்து அந்த அமைப்பு தமிழ்நாடு முதலமைச்சர் எ.பழனிச்சாமிக்கு நேற்று அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது அக்கடிதத்திலேயே புலம்பெயர் தமிழர் சார்பில் மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அக்கடித்தின் விவரம் வருமாறு:மதிப்புக்குரிய முதலமைச்சர் எ.பழனிச்சாமி அவர்களுக்கு!

	பூமிப் பந்தின் அட்டதிக்கெங்கும் பரவி வாழும் உலகின் மூத்த குடியான தமிழ்க் குடியின்     அடையாளமாகத் திகழுவது மாமன்னன் இராசஇராச சோழன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயில் ஆகும். இக் கோயிலின் வரலாற்றுப் பெருமையே உலகின் முற்றமெங்கும் தமிழினத்தின் பெருமையையும் அவர்கள் கொண்டிருக்கும் பண்பாடு நாகரீகம் போன்ற சிறப்புகளை பறைசாற்றி நிற்கின்றது. அந்த வகையில் உலகெங்கும் வாழும் தமிழர்கள் தஞ்சைப் பெரிய கோயிலுக்கு 'தமிழில் குடமுழுக்கு' நடத்த வேண்டும் என்பது தமிழினத்தின் வரலாற்று உரிமையாக கொள்கின்றார்கள். 
	05.02.2020 அன்று தஞ்சைப் பெரிய கோயிலுக்கு நடைபெற இருக்கும் குடமுழுக்கு வடமொழியில்  நடைபெறும் என்ற செய்தி தமிழினத்தை பெரும் கொதிப்படையச் செய்திருக்கின்றது. 

பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அவர்களும் கனடா நாட்டு பிரதமர் ஜஸ்ரின் ரூடோ அவர்களும் 'தமிழினத்தின் பண்பாடு' உலகு வியந்து போற்றிக் கொண்டாடவேண்டியது என தமது அரசு செய்திக் குறிப்பில் தெரிவித்து இருக்கின்றார்கள். கனடா நாட்டு நாடாளுமன்றம் 2016 ஆண்டு ஓருமித்த குரலாக தை மாதத்தை 'தமிழர் மரபு உரிமை மாதம்' ஆக அறிவித்தது. 2016 ஆம் ஆண்டில் இருந்து கனடா நாடுமுழுக்க அரசு ஏற்பாட்டில் கண்காட்சிகள் விழாக்கள் மாநாடுகள் நடைபெற்று தமிழர் அல்லாத கனடிய மக்களுக்கு தமிழினத்தின் பெருமையை எடுத்து இயம்புகிறது. பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன், கனடியப்  பிரதமர் ஜஸ்ரின் ரூடோ அவர்களும் தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி, சால்வை அணிந்து பொங்கல் விழா கொண்டாடிய படங்கள் செய்தி ஊடகங்கள் எங்கும் பரவியதை நீங்கள் அறிந்திருக்கலாம். தமிழினம் இன்று உலகை ஈர்க்கும் இனமாக மாறிவருகிறது. 
	அந்த வகையில் தமிழர்களின் பார்வை மட்டுமல்ல தமிழர்கள் அதிகமாக வாழும் நாடுகளின் பார்வையும் 05.02.2020 நடைபெற இருக்கும் குடமுழுக்கு குறித்து திரும்பி இருக்கின்றது. ஆகையால் இந்தக் குடமுழுக்கு தமிழில் தமிழர்களால் நடத்த ஆவன செய்யவேண்டும் என தங்களை புலம்பெயர்ந்த தமிழர்கள் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
 
நன்றி
ப.திருமுருகவேந்தன்
செயலாளர்
தமிழ்த்தாய் மன்றம்
இணைப்பாளர்
அனைத்துலக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு

என அக்கடித்த்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
  

496 Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *