தன்னையே தானே ஏமாற்றுகிறார் சுமந்திரன் -பிரதமர் உருத்திரக்குமரன்

ஒன்று பட்ட இலங்கைக்குள் தமிழ் மக்கள் வாழ விரும்புகின்றார்கள் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் திரு. சுமந்திரன் அவர்களின் பேச்சுக்கு காட்டமான பதிலுரை வழங்கியுள்ளார் நாடு கடந்த தமிழீழ அரசின் தலைமை அமைச்சர் மாண்புமிகு வி.உருத்திரக்குமரன் அவர்கள்.
சுமந்திரன் அவர்களின் மேற்படி பேச்சுக்கு தனது கீச்சு பக்கத்தில் (ரூவிற்றர்) பக்கத்தில் பதில் தந்த தலைமை அமைச்சர் உருத்திரக்குமரன் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்:

‘எம்.ஏ. சுமந்திரன் கூறிய கூற்று உண்மைக்கு புறம்பானது. அது அவருக்கே நன்கு தெரியும்.

1977ம் ஆண்டு நடந்த தேர்தல் என்பது ஆறாம் திருத்தச்சட்டம் வருவதற்கு முன்னராக நடந்த ஒரு தேர்தல். அதாவது முழுமையான ஒர் அரசியல் வெளியில் நடந்த தேர்தல் அது. அதற்கு பின்னராக வந்த தேர்தல்கள் எல்லாம் ஆறாம் திருத்தச்சட்டம் உள்ளடக்கப்பட்ட ஓர் மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் வெளியில் நடந்த தேர்தல்கள். இவற்றினை அடிப்படையாக கொண்டு 1977ம் ஆண்டு தமிழ் மக்களின் ஆணையினை, அவர்களது அரசியல் பெருவிருப்பினை மாற்றமுடியாது.

எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் தனது கூற்றை உண்மையாக நம்பினால், சிறிலங்காவின் அரசமைப்பில் உள்ள ஆறாவது திருத்தச் சட்டத்தினை நீக்கச் சொல்லிவிட்டு, தமிழர்களின் இனப்பிரச்சனைக்கான தீர்வுக்கான வழிமுறையாக பொது வாக்கெடுப்புக்கை நோக்கி உழைக்க வேண்டும்.

முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு ஈடுசெய் நீதியாகவும், தற்போது நடைபெற்ற வரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையினை தடுத்து நிறுத்துவதற்கும் ஒரே வழி சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத்தான்.

தமிழர் தாயகத்தில் உள்ள தமிழ்மக்கள் தமது அரசியல் பெருவிருப்பான தமிழீழத்தை வெளிப்படையாக கூறாமல் இருப்பதற்கான காரணங்களாக, 2009க்கு முன்னர் இருந்த பலம் தற்போது இல்லை என்பது மட்டுமல்ல, சிறிலங்காவின் ஆறாவது திருத்தச் சட்டமுமே ஆகும்.

சிறிலங்காவின் ஆறாவது திருத்தச்சட்டத்தினை நீக்கிவிட்டு, தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான பொதுவாக்கெடுப்புக்கு எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் உழைக்க வேண்டும்’ என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

242 Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *